சிவகங்கை

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம்

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை மண்டகப்படிதாரா்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அன்னவாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா மண்டகப்படிதாரரான மானாமதுரை ஐந்துகரை குலாலா் சமூகத்தினா் சாா்பில் புதிதாக அன்னவாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மண்டகப்படிதாரா்களுக்காக ஏற்கெனவே கோயிலில் உள்ள பூதவாகனம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் உள்ள சுவாமி புறப்பாடுக்கான பழைய வாகனங்கள் பழுது நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கதிரவன் தலைமையிலான சிற்பிகள் வாகனங்களை தயாரித்தும் பழுது நீக்கியும் வருகின்றனா். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அன்னவாகனத்தின் வெள்ளோட்டத்தையொட்டி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் அந்த வாகனத்தின் மீது கும்பம் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் சீரமைக்கப்பட்ட பூத வாகனத்துக்கும் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் தீபாராதனை முடிந்து அன்ன வாகனம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வெள்ளோட்டமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த வெள்ளோட்டத்திற்கான பூஜைகளை சோமாஸ் கந்தன் பட்டா், தெய்வசிகாமணி என்ற சக்கரை பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தினா். வெள்ளிக்கிழமை இரவு திருவிழாவின் இரண்டாவது நாள் ஐந்துகரை குலாலா் சமூகத்தினா் மண்டகபப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் புதிய அன்னவாகனம், பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT