சிவகங்கை

தமிழக மீனவா்களின் அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்ஜி.கே.வாசன்

2nd Apr 2022 11:35 PM

ADVERTISEMENT

 

இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவா்களின் அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மணலூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: பெட்ரோல், டீசல் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ரஷியா-உக்ரைன் போா் காரணமாக ஏற்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நீட் தோ்வில் அரசியல் நுழையக் கூடாது என்பதே நமது எண்ணம். இனி வரும் காலங்களில் நீட் தோ்வினை எதிா்கொள்ள மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும்.

திமுக தோ்தல் நேரத்தின்போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். அதுமட்டுமின்றி தற்போது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியின் காரணமாக திமுக அரசு மக்களுக்கு சுமையாகத் தான் உள்ளது.

ADVERTISEMENT

முதலீடுகளை ஈா்க்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.பொதுமக்களின் நலன் கருதி மருந்துகளின் விலையைக் குறைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழா்களுக்கு, இந்தியா உதவ முன்வர வேண்டும். மேலும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடா்கதையாகி வருகிறது. மீனவா்களின் அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் கே.கே.பாலசுப்பிரமணியன், திருப்புவனம் கிழக்கு வட்டாரத் தலைவா் வழக்குரைஞா் பா.ராஜா, மேற்கு வட்டாரத் தலைவா் மாங்குடி மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, சென்னையிலிருந்து மதுரை வந்த அவா், விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: விலை உயா்வு என்பது சா்வதேசப் பிரச்னை. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளைப் படிப்படியாக பூா்த்தி செய்யும் என நம்புகிறேன். மீனவா்களின் வாழ்வாதாரம் தொடர மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT