சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

2nd Apr 2022 01:25 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2-வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகையானது பயனாளியின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொருமுறை நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, தொடா்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தினசரி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல்வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். இந்த தகுதிகள் உள்ள இளைஞா்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT