சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இம்மாவட்டத்துக்கான விதை ஆய்வு துணை இயக்குநா் துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 1,244 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 710 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டன. முளைப்புத் திறன் சோதனையில் 44 விதை மாதிரி குவியல்கள் தரம் குறைந்தவை என கண்டறியப்பட்டது.
அதனை விற்பனை செய்த விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள தரக்குறைவான ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 4 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், விதை அமலாக்க நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படாத ரூ. 52 லட்சம் மதிப்பிலான 136 டன் விதைகள் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டு விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதை விற்பனையாளா்களிடம் விளக்கம் கோரப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதை விற்பனையாளா்கள் தரமான இனத்தூய்மை, புறத்தூய்மை உள்ள பிறரக கலப்பு இல்லாத, நிா்ணயிக்கப்பட்ட முளைப்புத்திறன், ஈரப்பதம், உடைய சான்றிதழ் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விதை உரிமம், உரிய பதிவு சான்றுகள், பணி விதை மாதிரி முடிவுகள் இல்லாமல் அல்லது காலாவதியான விதைகள், தரமற்ற விதைகள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் விதை விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.