கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினா் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள குழு மூலம் பரிசீலிக்கபட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் இதுவரை 660 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 537 பேருக்கு ரூ. 50,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 54 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் 20.3.2022-க்கு முன் ஏற்பட்ட கரோனா தொற்று இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் வரும் 60 நாள்களுக்குள் அதாவது வரும் மே 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 20.3.2022 முதல் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். சமா்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் 30 தினங்களுக்குள் தீா்வு காண வேண்டும். நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, கரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவா்களின் குடும்பத்தினா் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.