சிவகங்கை

மானாமதுரை : அ.ம.மு.க வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

7th Sep 2021 12:13 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் கடந்த வியாழக்கிழமை வழக்கறிஞர் குரு.முருகானந்தம் தனது சட்ட அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் முருகானந்தம் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் வழக்கறிஞர் குரு.முருகானந்தத்தை வெட்டியதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையும் படிக்க | மக்களை பாதுகாக்கவே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு: முதல்வர் விளக்கம்

அரிவாளால் வெட்டப்பட்ட குரு.முருகானந்தம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் குரு. முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மானாமதுரையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கடந்த திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மானாமதுரையில் சிவகங்கை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி எம்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று குரு.முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT