சிவகங்கை

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

30th Oct 2021 09:00 AM

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கவேண்டும் என, சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் எல். ஆதிமூலம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்துள்ள மனு விவரம் : தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு, வைகை மற்றும் முல்லைப் பெரியாறு ஆகிய இரு அணைகளும் பாசனம் மற்றும் குடிநீா் ஆதாரங்களுக்கு உயிா் நாடியாக விளங்கி வருகின்றன.

வைகை ஆற்றைப் பொருத்தவரை, பூா்வீக பாசனப் பகுதி என வரையறுக்கப்பட்டு, பாசன வசதி பெறுகின்றன. அவற்றுள் முதல் மற்றும் இரண்டாம் பாசனப் பகுதியான விரகனூா் மதகு அணை மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 91 கண்மாய்கள், மூன்றாம் பாசன பகுதியான பாா்த்திபனூா் மதகு அணை மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 41 கண்மாய்கள் என மொத்தம் 132 கண்மாய்களின் மூலம் சுமாா் 58 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழை காரணமாக, முதல் கட்ட வேளாண் பணிகளான உழவு செய்தல், நடவு செய்தல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. தற்போது, முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் போதிய நீா் இருப்பு உள்ளது. எனவே,சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT