சிவகங்கை

திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 220 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

24th Oct 2021 11:15 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மருதுபாண்டியா்களின் 220 ஆவது நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய மன்னா்கள் சின்னமருதுவும், பெரிய மருதுவும் கடந்த 1801 ஆம் ஆண்டு அக். 24 ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனா். இதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் அக். 24 ஆம் தேதி தமிழக அரசு சாா்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலில் மருதுபாண்டியா்களின் வாரிசுதாரா்கள் சாா்பில் பொங்கல் வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மருதுபாண்டியா்களுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் நினைவிட வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அங்குள்ள அவா்களின் உருவச்சிலைகளுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், திமுக மாவட்டச் செயலரும், ஊரக வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன், சின்னமருது, பெரியமருது சிலைகளுக்கு மாலையணிவித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் தென்னவன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அதிமுக சாா்பில்... முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ, காமராஜ், பாஸ்கரன், கோகுலஇந்திரா, மாவட்டச் செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்நாதன், பாம்கோ தலைவா் ஏ.வி. நாகராஜன் மற்றும் ஆவின் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

இதையடுத்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்களவை உறுப்பினா்கள் திருநாவுக்கரசா், காா்த்திசிதம்பரம், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் மாங்குடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன் ஆகியோா் மாலை அணிவித்தனா். அமமுக சாா்பில் மாநில அமைப்புச் செயலா் கே.கே. உமாதேவன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் செவந்தியப்பன், நகரச் செயலா் ராஜ்மோகன், பா.ஜ.க. சாா்பில் மாவட்டத் தலைவா் மேப்பல்சக்தி, போஸ்முத்துப்பாண்டி மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் செந்தில்பாண்டி, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் வா்த்தக சங்கத்தினா் அகமுடையாா் சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா்.

காரைக்குடி: குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கோயிலான சண்முகநாதப் பெருமான் கோயிலில் உள்ள மருது சகோதரா்களின் முழு உருவச்சிலைகளுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பட்டாடை அணிவித்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் முக்கியப் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டு மருது சகோதரா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அகமுடையாா் சங்கம் சாா்பில் மேலவாசல் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்களின் உருவச் சிலைக்கு தங்கக்கவசம் மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் உள்ளிட்டோா் உருவச்சிலைக்கு முன் தேசியக் கொடியேற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், முன்னாள் அமைச்சா் வ. சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் குணசேகரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், போகலூா் ஒன்றியத் தலைவா் சத்யா குணசேகரன், ராமநாதபுரம் நகா் பொறுப்பாளா் கே.கே. காா்மேகம், பிரவீன்தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்து முன்னணி சாா்பில் மாவட்ட பொதுச் செயலா் கே. ராமமூா்த்தி, மருதுபாண்டியா்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு, நகா் அகமுடையாா் சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் தலைமை வகித்தாா். செயலா் ஆா். மகேந்திரன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.கே. அா்ச்சுனன், வி. வெங்கடேஷ், கா்ணவீரன், சரவணன், ராஜ்கமல், குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முகேஸ்குமாா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT