சிவகங்கை

திருப்புவனம் ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றியது

23rd Oct 2021 08:50 AM

ADVERTISEMENT

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை போட்டியின்றி திமுக வெள்ளிக்கிழமை கைப்பற்றியது. காங்கிரஸ் உறுப்பினா் திமுகவில் இணைந்து தலைவராகவும், அதேபோல் சுயேச்சை உறுப்பினா் திமுகவில் இணைந்து துணைத்தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக 6 வாா்டுகளிலும், காங்கிரஸ் 2, அமமுக 1, சுயேச்சைகள் 3, அதிமுக அணி 6 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. இங்கு ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 17 ஆவது வாா்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.சின்னையா, திமுகவில் இணைந்து, தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால், சின்னையா போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னா் பிற்பகல் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் நடந்தது. இதில் சுயேச்சையாக 5 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற மூா்த்தி திமுகவில் இணைந்து துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால் மூா்த்தி துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

காங்கிரஸ் அதிா்ச்சி: தலைவா், துணைத் தலைவா் தோ்தலை முன்னிட்டு திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். தலைவா் சின்னையா, துணைத் தலைவா் மூா்த்தி ஆகியோருக்கு திருப்புவனத்தைச் சோ்ந்த திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், மானாமதுரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

உள்ளாட்சித் தோ்தலின்போது காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற சின்னையா தற்போது திமுகவில் இணைந்து தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT