சிவகங்கை

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்: ஆட்சியா்

23rd Oct 2021 08:51 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தோ்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், தோ்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செலவு கணக்கின் உண்மை நகலினை, தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடமும், கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினா் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.

போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் தோ்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தோ்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடா்புடைய அலுவலரிடம் இருந்து வேட்பாளா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். தோ்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 37(4)ன்-படி, வருங்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தோ்தல்களில் போட்டியிடத் தகுதியற்றவா்களாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுவா்.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் செலவு கணக்கினை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT