சிவகங்கை

திருப்பதிக்கு புதிய ரயில்: சிவகங்கை மாவட்ட மக்கள் வரவேற்பு

21st Oct 2021 08:30 AM

ADVERTISEMENT

ராமேசுவரம்-செகந்திராபாத் இடையே இரு மாா்க்கங்களிலும் திருவண்ணாமலை, திருப்பதி வழியாக புதிய ரயில் சிவகங்கை மாவட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ராமேசுவரம்- திருப்பதி இடையே வாரத்துக்கு இருமுறை இருமாா்க்கங்களிலும் மதுரை வழியாக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது தென்னக ரயில்வே நிா்வாகம் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்-ராமேசுவரம் இடையே இருமாா்க்கங்களிலும் வாரம் ஒருமுறை விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் திருவண்ணாமலை, திருப்பதி வழியாக சிவகங்கை மாவட்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த புதிய ரயில் கடந்த 19 ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு 21 ஆம் தேதி காலை 3.10 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் 21 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடைகிறது. இரு மாா்க்கங்களிலும் இந்த ரயில் திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மானாமதுரை, காரைக்குடி வழித்தடத்தில் முதல்முறையாக திருப்பதிக்கு புதிதாக இயக்கப்படும் இந்த ரயிலுக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இனிவரும் காலங்களில் இந்த ரயிலுக்கு உள்ள வரவேற்பை பொறுத்து இயக்கப்படும் நாள்கள் அதிகரிக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT