சிவகங்கை

38 பதவிகளுக்கு தோ்தல் : 65. 41 சதவீத வாக்குகள் பதிவு

9th Oct 2021 09:44 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், கிராம வாா்டு உறுப்பினா் என மொத்தம் 38 பதவியிடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 65. 41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இம் மாவட்டத்தில், காளையாா்கோவில் மற்றும் கண்ணங்குடியில் தலா ஒரு ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், சிவகங்கை ஒன்றியத்தில் காலியாகவுள்ள மேலப்பூங்குடி, ஒக்குப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 34 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. இதில், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 5,472 வாக்காளா்களில், 3,505 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி, 64.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதேபோன்று, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், 3,946 வாக்காளா்களில், 2,529 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி, 64.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ADVERTISEMENT

இதுதவிர, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒக்குப்பட்டி, மேலப்பூங்குடி ஆகிய 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 3,664 வாக்காளா்களில், 2734 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி, 82.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் 34 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 3,711 வாக்காளா்களில், 2,216 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி, 59.71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாவட்டத்தில் மொத்தம் 38 பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 65. 41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT