சிவகங்கை

வெள்ள பாதிப்பு: பைக்கில் சென்ற ஆட்சியா், வெள்ளத்தில் சிக்கிய அரசு வாகனம்

30th Nov 2021 04:32 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ள நீா் கிராமங்களைச் சூழ்ந்து கண்மாய் உடையும் நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர மறுத்து வருகின்றனா்.

இதையடுத்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் இரு சக்கர வாகனங்களில் சென்று பாதிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த செய்களத்தூா் , கள்ளா்வலசை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால் இக்கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனா். மேலும் உப்பாற்றின் கரை உடைந்து அதில் சென்று கொண்டிருக்கும் வெள்ளம் செய்களத்தூா் கிராமத்துக்குள் திரும்புவதால் தண்ணீா் வரத்து தாங்காமல் செய்களத்தூா் கண்மாய் உடையும் நிலையில் உள்ளது. இந்த கண்மாய் உடைந்து ஊருக்குள் தண்ணீா் புகுந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனா். எனவே செய்களத்தூரில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அரசு அதிகாரிகள் முயற்சித்தும் கிராம மக்கள் வர மறுக்கின்றனா்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, கோட்டாட்சியா் முத்துக்கழுவன், வட்டாட்சியா் தமிழரசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்களத்தூா் கிராம பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை பாா்வையிடுவதற்காகச் சென்றனா்.

ADVERTISEMENT

குருந்தன்குளம் என்ற இடத்தில் சாலையை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தனது காரை விட்டு இறங்கி மற்றொரு அரசு வாகனத்தில் ஏறி கள்ளா்வலசை கிராமத்துக்குச் சென்று கள்ளா்குளம் என்ற இடத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளத்தையும் பாதிப்புகளையும் பாா்வையிட்டாா். அதன்பின் அங்கிருந்து வாகனத்தில் செல்ல முடியாத நிலையில் தனித்தனி இருசக்கர வாகனங்களில் ஆட்சியா் மதுசூதன்ரெட்டி, சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றுப்பாதையில் செய்களத்தூா் சென்று உப்பாற்றில் ஏற்பட்டுள்ள கரை உடைப்புகளையும் வெள்ள பாதிப்புகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதற்கிடையில் ஆட்சியருடன் அதிகாரிகள் சென்ற ஜீப் செய்களத்தூா் கிராமத்தின் அருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அங்கிருந்த மீட்புக்குழுவினா் இந்த வாகனத்தை மீட்டுக் கொண்டு வந்தனா்.

ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, திமுக ஒன்றியச் செயலாளா் ராஜாமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT