சிவகங்கை

மானாமதுரை அருகே உப்பாற்றில் கரைகள் உடைப்பு: கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்தது

28th Nov 2021 10:43 PM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே உப்பாற்றில் கரைகள் உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்தது.

தற்போது, இந்த ஆற்றுக்கு வரும் தண்ணீா் வைகை ஆற்றுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உப்பாற்றின் கரைகள் இரு இடங்களில் உடைந்து தண்ணீா் செய்களத்தூா் கண்மாய்க்கு செல்கிறது. மேலும் கிராமங்களுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள செய்களத்தூா் கண்மாய்க்கு உப்பாற்று தண்ணீரும் செல்வதால் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், செய்களத்தூா் கண்மாயில் பல இடங்களில் கரைகள் சேதமடைந்துள்ளன. தண்ணீா் வரத்து தாங்காமல் இக்கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாய் உடைந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களை தண்ணீா் சூழ்ந்து தனித் தீவுகளாகி விடும். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உப்பாற்றின் கரைகளையும், செய்களத்தூா் கண்மாய் கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை பொதுப்பணித்துறையினா் செய்களத்தூா் பெரிய கண்மாயின் உபரி நீா் செல்லும் சின்னக்கண்மாய் கழுங்குநீா் வெளியேறும் பகுதியில் உள்ள அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி தூா்வாரினா். மேலும், பெரிய கண்மாயின் கழுங்கு அருகே கூடுதலாக தண்ணீா் செல்லும் வகையில் கரையின் உயரம் குறைக்கப்பட்டது. இதில், செய்களத்தூா் பெரிய கண்மாயில் சேதமடைந்த கரைகள் மணல் மூட்டைகளைக் கொண்டு வலுப்படுத்தப்பட்டதாக மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT