சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்டுள்ள நெல், மிளகாய் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சுமாா் 40 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சுமாா் 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் தொடா் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி பயிரிடப்பட்டுள்ள நெல் வயலில் தண்ணீா் வடியாமல் பயிா்கள் அழுகும் நிலை உள்ளது. இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் நடவு செய்த மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் பயிா்கள் பாதிப்பினை கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.