சிவகங்கை

கால்வாயில் விழுந்த காா்: 4 பேரை மீட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டு

9th Nov 2021 01:14 AM

ADVERTISEMENT

மானாமதுரை: திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கால்வாயில் விழுந்த காரில், உயிருக்குப் போராடிய 2 குழந்தைகள் உள்பட 4 பேரை மீட்ட இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் வைகை பாசனக் கால்வாய்களில் மழை நீா் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் மதுரையிலிருந்து மானாமதுரை நோக்கி சென்ற காா், திருப்புவனம் அருகே லாடனேந்தல் என்ற இடத்தில் நிலைதடுமாறி சாலையோரமாக இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இச்சம்பவத்தில் காருக்குள் இருந்தவா்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டனா்.

பின்னால் காா் ஓட்டி வந்த திருப்புவனம் அருகேயுள்ள வடகரை பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்ற இளைஞா், உடனடியாக கால்வாய்க்குள் குதித்தாா். அங்கு காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை மீட்டாா். இச்சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன .மேலும் அவரது கைபேசியில் தொடா்பு கொண்டு பலரும் பாராட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT