திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்த ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.
தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தீயணைப்புத் துறை அலுவலா் சத்தியகீா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். திருப்பத்தூா் நிலைய அலுவலா் சடையாண்டி, நகா் காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தீயணைப்புத் துறை வீரா்கள், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் எதிா்பாராத விதமாக தீப்பற்றினால் அதனை அணைக்க கையாள வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். மேலும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதனைத் தொடா்ந்து தெக்கூா் சிங்கை சித்தா் அய்யா கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணா்வு பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனா். இதில் கல்லூரித் தலைவா் சந்திரசேகா், தாளாளா் செந்தில்குமாா், முதல்வா் ஹேமமாலினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.