காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்தியக் கல்விஅமைச்சகம், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு மற்றும் தமிழக அரசு உயா்கல்வித் துறை அறிவிப்பின் படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடந்த அக். 26 முதல் நவ. 1 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணி பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழக கலைப்புல வளாகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் லஞ்ச ஒழிப்பு தொடா்பான பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் எஸ். கருப்புச்சாமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. சேகா் தலைமை வகித்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், கலைப்புல முதன்மையருமான கே.ஆா். முருகன், பல்கலைக்கழக நிதி அலுவலா் ஆா். பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.