சிவகங்கை

‘அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’

1st Nov 2021 11:10 PM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வெடிபொருள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனைக்கடைகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்.

உரிய அனுமதி வழங்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயாா் செய்யப்பட்ட பட்டாசுக்கள் மற்றும் சரவெடி வெடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சரவெடி உள்ளிட்ட பட்டாசு வகைகளை பொதுமக்கள் வெடிக்கக்கூடாது.

ADVERTISEMENT

மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுக்களை வெடிக்கக்கூடாது. சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT