திருப்பத்தூர்: மு.க., ஸ்டாலினை நம்பி வாக்களிப்பது கிணற்றில் விழுவதற்கு சமம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களின் பார்வை தற்போது எங்கள் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. இத்தேர்தலில் 120 இடங்களில் உறுதியாக வெல்வோம். தே.மு.தி.க.வை எங்கள் கூட்டணியில் சேருமாறு அழைத்தோம். அவர்கள் வேறு இடம் சென்று விட்டார்கள்.
எங்கள் தேர்தல் அறிக்கையை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இருகட்சிகளும் மாநில சுயாட்சியை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பங்கு வைத்துக் கொண்டன.
கருணாநிதியிடம் இருந்த நிர்வாகத் திறமை மு.க. ஸ்டாலினிடம் கிடையாது. அவரை நம்பி வாக்களிப்பது கிணற்றில் விழுவதற்குச் சமம். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் 20 சதவிகித வாக்குகளே உள்ளன. எனவே 80 சதவிகித ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கும். 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன்களை அடைப்பதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது என்றார்.
அப்போது மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் ராஜேஷ் உடனிருந்தார்.