சிவகங்கை மாவட்டம் சின்ன குன்றக்குடி அருகே புதன்கிழமை இரவு மினி லாரியில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த இருவரை சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னக் குன்றக்குடி அருகே சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சாா்பு- ஆய்வாளா் முத்துகிருஷ்ண ராஜா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்களின்றி 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநா் சிவகங்கையைச் சோ்ந்த பால சரவணன் (42), லாரியில் அரிசியை கடத்தி வந்த மூா்த்தி (44) ஆகிய 2 பேரை கைது செய்து லாரியுடன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டையை சிவகங்கையில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.