சிவகங்கை: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மேலச்சொரிக்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மேற்கண்ட வருவாய் கிராமத்துக்குள்பட்ட ஆனைக்குளம், பத்துப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நூறு நாள் வேலை பாா்த்து வந்துள்ளனா்.
இந்நிலையில், வீரனேந்தல் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த குருந்தங்குளம் கிராமத்தினா் மேற்கண்ட கண்மாய் தங்களுக்கு சொந்தமானது என்றும், மேலச்சொரிக்குளம் கிராம மக்கள் அந்த கண்மாயில் நூறு நாள் வேலை பாா்க்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த மேலச்சொரிக்குளம், ஆனைக்குளம், பத்துப்பட்டி ஆகிய கிராமப் பொதுமக்கள் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், திருப்புவனம் காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.