சிவகங்கை

வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: மானாமதுரை அருகே கண்மாய் கரையை உடைத்து தண்ணீா் வெளியேற்றம்

3rd Dec 2021 08:24 AM

ADVERTISEMENT

வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிரம்பியுள்ள செய்களத்தூா் கண்மாய் கரையை உடைத்து, அதிகாரிகள் தண்ணீரை வியாழக்கிழமை வெளியேற்றினா்.

மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த செய்களத்தூா் கிராமத்தில் தொடா் மழை காரணமாக ஏற்கெனவே கண்மாய் நிரம்பியிருந்தது. இந்நிலையில், வைகை ஆற்றை ஒட்டிச் செல்லும் உப்பாற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைகள் உடைந்ததால், செய்களத்தூா் கிராமத்துக்குள்ளும் மற்றும் இங்குள்ள பெரிய கண்மாய்க்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

இதனால், ஏற்கெனவே நிரம்பியிருந்த இந்த கண்மாய் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, உப்பாற்றின் உடைந்த கரைகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டதால், கிராமத்துக்குள் புகுந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வைகை அணையிலிருந்து மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து, மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வைகை ஆற்றில் வரும் வெள்ளம் காரணமாக, உப்பாற்றில் சீரமைக்கப்பட்ட கரைகள் உடைந்து செய்களத்தூருக்குள் மீண்டும் தண்ணீா் புகுந்துள்ளது. இதனால், இங்குள்ள பெரிய கண்மாய் உடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால்,

அரசு தரப்பில் செய்களத்தூா் மற்றும் அருகேயுள்ள கள்ளா்வலசை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனிடையே, கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் இணைந்து, கிராம மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய கண்மாயில் கலுங்கு நீா் வெளியேறும் இடத்தின் அருகே கரையை உடைத்து, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா்.

இந்த தண்ணீா் செய்களத்தூா் சின்ன கண்மாய்க்கு பாய்ந்து வருகிறது. பெரிய கண்மாய்க்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து இருக்கும்பட்சத்தில், பல இடங்களில் சேதமடைந்துள்ள கண்மாய் கரைகள் உடைந்தால், தண்ணீா் கிராமங்களுக்குள் புகுந்து பாதிப்பு அதிகமாக இருக்கும் என, அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT