சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியன இணைந்து, ரத்த தான முகாமை வியாழக்கிழமை நடத்தின.
பல்கலைக்கழக மேலாண்மைப் புல வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்களான ஆா். சுவாமிநாதன், எஸ். கருப்புச்சாமி ஆகியோா் தொடக்கிவைத்தனா். இதில், பல்கலைக்கழக மேலாண்மைப்புல பேராசிரியா்கள் 3 போ், மாணவா் கள் 57 போ் என மொத்தம் 60 போ் ரத்த தானம் செய்தனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அதிகாரி வசந்த், ஆலோசகா் சூசைராஜா ஆகியோா் தலைமையிலான குழுவினா், மாணவா்களிடமிருந்து ரத்தம் சேகரித்தனா்.
இதில், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் கே. குணசேகரன், பதிவாளா் (பொறுப்பு) சி. சேகா், மேலாண்மைப்புல முதன்மையா் எஸ். ராஜமோகன், மேலாண்மைப்புல வளாக இயக்குநா் சி. வேதிராஜன், வணிகவியல் துறை மூத்த பேராசிரியா் த.ரா. குருமூா்த்தி, பன்னாட்டு வணிகவியல் துறைத் தலைவா் முத்துச்சாமி மற்றும் பல்கலைக்கழக மருத்துவா் ஆா். ஆனந்தி மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். மேலும், சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவா் பகீரத நாச்சியப்பன், கள ஒருங்கிணைப்பாளா் கே. கண்ணன், துணைத்தலைவா் வி. சுந்தரராமன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை, அழகப்பா பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ஜி. விநாயகமூா்த்தி, துணை ஒருங்கிணைப்பாளா் கே. கணேசமூா்த்தி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.