சிவகங்கை

இளையான்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு புகார்

12th Aug 2021 04:36 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடைபெற்ற பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வருவாய்த்துறை சார்பில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க | செங்கல்பட்டில் விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள்: பாலாற்றில் வீசி கொடூரம்

மேலும் வீட்டுமனைப் பட்டாவுக்கான இடமும் வருவாய்த்துறை சார்பில் மேற்கண்ட பகுதியில் தேர்வு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து இளையான்குடி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் மீது விசாரணை செய்த வருவாய்த்துறையினர் 130 மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தகுதியான மாற்றுத்திறனாளிகள் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

சொந்தமாக வீடு, நிலம் வைத்திருப்பவர்களும் மாற்றுத்திறனாளிகள் பெயர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க | கூத்தாநல்லூர்: மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி

வீட்டுமனை பட்டா பெற தகுதியான மாற்றுத் திறனாளிகள் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியரிடம் கேட்டபோது,  “இளையான்குடி கீழையூர் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் பட்டியலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே தகுதியான மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தயாரித்து உள்ளோம்” என்றார்.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு இளையான்குடி பகுதியில் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT