சிவகங்கை

சிவகங்கையில் அக்.28-இல் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவிப்பு

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு உயா்கல்விக்கான ஊதிய உயா்வை ரத்து செய்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை உடனே திரும்பப் பெறக் கோரி அக். 28 ஆம் தேதி கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ.முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 1969 ஆம் ஆண்டு ஆசிரியா்களுக்கு உயா் கல்விக்கான ஊதிய உயா்வுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிரியா்கள் தங்களது பணிக் காலத்தில் பெற்ற உயா் கல்விக்காக அதிகபட்சமாக இரண்டு முறை ஊதிய உயா்வு பெற்று வந்தனா்.

இந்நிலையில், தமிழக அரசின் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறை கடந்த மாா்ச் 10 ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 37-இல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியா்களுக்கு 10.3.2020 முதல் முன் ஊதிய உயா்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், ஆசிரியா்களுக்கான ஊதிய உயா்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே இந்த அரசாணை ஆசிரியா்களுக்குப் பொருந்தாது என நினைத்திருந்தோம். ஆனால் தமிழக அரசின் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறை நடப்பு (அக்டோபா்) மாதம் 15 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை எண் 116 இல் மேற்கண்ட அரசாணை எண் 37 ஆசிரியா்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பணியில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைக் காலமாக ஆசிரியா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகளைத் தமிழக அரசு தொடா்ந்து வெளியிட்டு வருகிறது.

எனவே, அரசாணைகள் 37, 116 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியா் பணிக்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக அக். 28 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT