சிவகங்கை

மானாமதுரை அரசு மருத்துவமனையில் திறப்புவிழா காணும் முன்னே சேதமடைந்த தங்குமிட கட்டட தரைத்தளம்

5th Oct 2020 02:22 PM

ADVERTISEMENT

மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத தங்குமிடத்தின் கட்டடத்தில் தரைத்தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களுடன் உடன் வரும் நபர்கள் தங்குவதற்காக 2018-2019 ஆம் நிதியாண்டில் தேசிய வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் அரசு நிதியிலிருந்து ரூ32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தங்குமிட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

கட்டடத்தின் நுழைவு வாயில் பகுதியில் தரைத்தளத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் பணி முடிந்து வர்ணம் பூசும் பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை இக் கட்டிடம் திறக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இந்த புதிய கட்டடத்தின் முகப்பு பகுதியில் பலரும் தூங்கிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பலர் இரவு நேரங்களில் இங்கு உட்கார்ந்து மதுக் குடிக்கின்றனர். 

ADVERTISEMENT

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள தங்குமிட கட்டடம்.

இந் நிலையில் புதிய தங்குமிட கட்டடத்தின் முகப்பில் தரைத்தளத்தில் போடப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் சேதமடைந்து அந்த இடத்தில் பள்ளம் உருவாகியுள்ளது. மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள இந்தக் கட்டடத்தில் அதற்குள்ளாகவே தரைத்தளம் சேதமடைந்துள்ளதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்ட பலரும் புகார் தெரிவிக்கின்றனர். 

எனவே மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மேற்கண்ட தரைத்தளத்தை சீர் செய்து உடனடியாக கட்டடத்தை திறக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 

Tags : Sivagangai
ADVERTISEMENT
ADVERTISEMENT