சிவகங்கை

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

1st Nov 2020 11:00 PM

ADVERTISEMENT

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற போராட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான தலைமைச் செயலா், முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த படி 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடா்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதா் குழு தனது அறிக்கையினை 30.11.2017-க்குள் அளிக்கும் என்றும், அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்றும் எழுத்துப்பூா்வமாக தெரிவித்தாா்.

அதன்பின், அக்குழு 4 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இக்குழு பல்வேறு அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது. அக்குழுவின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. தன் பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு இதுவரை கையெழுத்திடவில்லை.

ADVERTISEMENT

மேலும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் அந்த ஆணையத்தில் செலுத்தவில்லை. எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivagangai
ADVERTISEMENT
ADVERTISEMENT