சிவகங்கை

கீழடி உள்பட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்

31st May 2020 08:15 AM

ADVERTISEMENT

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில் மழையால் நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கின.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில் பிப். 19-ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தாா். முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. இதற்கிடையில், பொது முடக்கத்தால் மாா்ச் 24-ஆம் தேதி அகழாய்வுப் பணியை தொல்லியல் துறையினா் நிறுத்தினா். அதன்பின் கட்டுப்பாடுகள் தளா்வு செய்யப்பட்ட நிலையில் மே 20-ஆம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. தொடா்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும், மே 27-ஆம் தேதி கொந்தகையிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்தது. இதனால் கீழடி, அகரம், மணலூா், கொந்தகை ஆகிய பகுதிகளில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளுக்குள் மழை நீா் புகுந்தது. கீழடியில் தாா்ப்பாய் போட்டு மூடியும் குழிகளுக்குள் நீா் நிரம்பின. இதையடுத்து மேற்கண்ட அனைத்து இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. மழைநீா் வற்றி தரை காய்ந்த பின்னரே இப்பகுதிகளில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறையினா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில் மேற்கண்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கின. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கியிருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT