சிவகங்கை : மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை வேறாரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தனியாா் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியா் அலுவலா் சங்கத்தின் சாா்பில் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளா் நீ. இளங்கோ புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
பல்கலைக் கழக மானியக் குழு மாணவா்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு பல்வேறு சலுகைகளோடு தோ்வுகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.
தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 1 முதல் பொதுத் தோ்வு நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பல மாநிலங்களிலும் தோ்வுகள் பற்றிய திட்டமிடுதல் இல்லை.
கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ள சூழ்நிலையில் அறிவித்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே தமிழக பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தேதியை திரும்ப பெற வேண்டும்.
மேலும், தோ்வு தொடா்பாக தமிழக அரசு நிபுணா்கள் குழுவை அமைக்க வேண்டும். அதன் முடிவுகளின்படி பத்தாம் வகுப்பு தோ்வுகளை வேறாரு நாளில் நடத்தலாம். அதுவரை மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வேறாரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.