சிவகங்கை

காரைக்குடியில் பாதாளச் சாக்கடை பணியின் போது சரிந்த மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி பலி

29th Jun 2020 11:29 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியின் போது சரிந்த மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்குடி பெருநகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் முக்கியச் சாலைகளில் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கீழ ஊரணி மேற்குப்பகுதியில் 20 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் குழாய் பதிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியில் திருப்பூா் மாவட்டம் காங்கயத்தைச் சோ்ந்த குப்புச்சாமி மகன் ராஜா (45) மற்றும் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது பணியில் இருந்த ராஜா மீது பள்ளத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக மண்ணை அப்புறப்படுத்தி அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT