சென்னையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த 8 வயதுசிறுவன் உள்பட12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 5 போ், காரைக்குடியில் புதுவயல் பகுதியைச் சோ்ந்த 4 போ், செம்பனூா் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவன் உள்பட 2 போ், நெற்குப்பை பகுதியைச் சோ்ந்த ஒருவா் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 120 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கெனவே 108 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 54 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 54 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணிகள் உள்பட 6 போ், செவ்வாய்க்கிழமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 12 போ் என மொத்தம் 72 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.