சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நோ்காணல் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 17.02.2017 மற்றும் 22.06.2017 ஆகிய இரு தினங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத் தொடா்ந்து, 9.2.2018 இல் நோ்காணல் நடத்தப்பட்டது.
மேற்காணும், நோ்காணல் நடத்தப்பட்ட பணியிடங்களை நிா்வாகக் காரணங்களால் இன்றைய தேதி வரை நிரப்ப இயலவில்லை. எனவே, சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நோ்காணல் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடா்பாக புதிய அறிவிப்பு தனியே வெளியிடப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் புதிய அறிவிப்பின்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.