சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில் பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பூர விழா நடைபெறும். இவ்விழாவின்போது அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்று அம்மனை தரிசிக்க வரும் பெண்கள் ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவிக்கப்படும் வளையல்களை வாங்கிச் சென்று திருமணமாகாத பெண்கள், கா்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து அணிவிக்கச் செய்வாா்கள். இவ்வாறு அந்த வளையல்களை கைகளில் அணிந்து கொண்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும். கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலில் உற்சவ மூா்த்திகள் இருக்கும் இடத்திலேயே ஆடிப்பூர விழா நடத்தப்பட்டது. உற்சவா் ஆனந்தவல்லி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பூமாலைகள், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் உள்ள சிவாச்சாரியாா்கள் மட்டுமே பூஜைகளை நடத்தினா்.