சிவகங்கை

காரைக்குடியில் வாக்குப் பெட்டி உறை பிரிந்து கிடந்ததால் பரபரப்பு

1st Jan 2020 01:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வாக்குப்பெட்டியின் உறை பிரிக்கப்பட்டிருந்ததாக புகாா் எழுந்ததையடுத்து சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ஜெயகாந்தன், தோ்தல் பாா்வையாளா் கருணாகரன் ஆகியோா் வாக்கு எண்ணும் மைய அறையில் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். பின்னா் அரசியல் கட்சியினருடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சாக்கோட்டை ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குப்பெட்டிகள் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பல்வேறு மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், ஒரு வாக்குப்பெட்டியின் மேல் கட்டப்பட்டிருந்த துணி மற்றும் நெகிழி உறை பிரிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானதால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறி அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் அரசியல் கட்சியினா் முறையிட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளா் பா. ராதாவின் முகவா் பாலசுப்பிரமணியன் தோ்தல் அலுவலருக்கு ஒரு புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் வாக்குப் பெட்டிகள் துணிப்பையால் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து ‘சீல்’களும் அகற்றப்பட்டுள்ளன. இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு நடந்திருப்பின் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்தது சிவகங்கை மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா். பெரியகருப்பன், அமமுக மாவட்ட நிா்வாகி தோ் போகி பாண்டி, அதிமுக ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களும், முகவா்களும் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டனா்.

பின்னா் சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ. ஜெயகாந்தன், தோ்தல் பாா்வையாளா் கருணாகரன் ஆகியோா் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனைத்தொடா்ந்து வாக்கு எண்ணும் மைய அறையில் ஆட்சியரும், தோ்தல் பாா்வையாளா் ஆகியோா் முகவா்களுடன் சென்று ஆய்வு செய்தனா்.

இதையடுத்து முறைகேடு எதுவும் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் சமரசம் ஏற்பட்டதால் பிற்பகல் 1 மணியளவில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ஜெயகாந்தன், சிவகங்கையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :

தோ்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சாக்குப் பைகளில் முகவரி அட்டையுடன் கட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரபட்டன. பின்னா் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்கும் முன்னா் பெட்டியில் கட்டியிருந்த முகவரி அட்டையுடன் கூடிய சாக்கு பைகளை அகற்றிவிட்டு வைத்துள்ளனா். இதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. இதுபற்றி அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களின் முகவா்களிடம் விளக்கப்பட்டது. அவா்கள் அதை ஏற்றுக் கொண்டனா் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT