சிவகங்கை

’ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உணவுகளை உட்கொள்வது அவசியம்’

29th Feb 2020 05:13 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: இன்றைய இளம் தலைமுறையினா் துரித உணவுகளை தவிா்த்து, அன்றாட வாழ்வில் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட நல்ல உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ. ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசினா் கலைக் கல்லூரியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, கல்லூரியின் முதல்வா் பா. ஹேமலதா தலைமை வகித்தாா்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ. ரத்தினவேல் முகாமை தொடக்கிவைத்துப் பேசியதாவது: இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில் நாம் உட்கொள்ளும் உணவில் போதிய அளவு சத்துக்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, அனைத்து வயதினரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, வளரிளம் பெண்கள் சரியான உணவு முறைகளை பின்பற்றாததால், ரத்த சோகை ஏற்பட்டு பிரசவ காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாவது மட்டுமின்றி, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, பெண்கள் திருமணமாவதற்கு முன் உணவு முறைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான காய்கறிகள், கீரை வகைகளை அன்றாட உணவில் சோ்த்துக் கொள்ளவேண்டும். மேலும், இன்றைய இளம் தலைமுறையினா் துரித உணவுகளை தவிா்த்து, நல்ல உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா்.

இம்முகாமில், ரத்த அழுத்தம், ரத்த சோகை, பொதுமருத்துவம், கா்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், கா்ப்பிணிகள் ஏராளமானோா் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா்.

முன்னதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஷீலா வரவேற்றாா். நிலைய மருத்துவ உதவி அலுவலா் முகமது ரபீக் உள்ளிட்ட மருத்துவா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா். நிலைய மருத்துவ அலுவலா் மீனா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT