சிவகங்கை

இளையான்குடி அருகே பயிர் காப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்கிழமை பயிர் இன்சூரன்ஸ் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம், சூராணம், இளையான்குடி, அ.திருவுடையார்புரம், சாலைக்கிராமம் ஆகிய வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதன் பயனாக பயிரிடப்பட்டு விளைச்சல் காணாத விவசாய நிலங்கள், வருவாய்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது. 

இதில் மற்ற வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த கிராமங்களுக்கு கூடுதலாகவும் தாயமங்கலம் வருவாய் பிரிவைச் சேர்ந்த தாயமங்கலம், கண்ணமங்கலம், காரைக்குளம், தேவாத்தங்குடி சூராணம் வருவாய் பிரிவைச் சேர்ந்த அளவிடங்கான் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு 25 சதவீதம் மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இக்கிராம மக்கள், மற்ற வருவாய் பிரிவைச் சேர்ந்த கிராம விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல் தங்கள் கிராமப் பகுதிகளுக்கும் 100 சதவீத காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.குணசேகரன் தலைமையில்  பரமக்குடி- காரைக்குடி பிரதான சாலையில் தாயமங்கலம் விலக்கு பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்து இளையான்குடி வட்டாட்சியர் ரமேஷ், பயிர் காப்பீட்டு அதிகாரிகள், காவல் துறையினர் மறியல் நடந்த இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 2 மணி நேரத்துக்குப்பின் விவசாயிகள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT