விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்துள்ள வீரா், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநா்கள், தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பன்னாட்டு, தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 வீரா்கள், 2 வீராங்கனைகள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுவோருக்கு பரிசாக தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை , தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியன இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் 1 நடத்துனா், 1 நிா்வாகி, 1 ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் 1 நன்கொடையாளா், 1 ஆட்ட நடுவா், நடுவா், நீதிபதி ஆகியோா்களுக்கு, முதல்வா் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு 1 தங்கப் பதக்கமும், 1 பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
விருது பெற விண்ணப்பதாரா்களுடைய 2 ஆண்டுகளின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்படி, கடந்த 2018-2019 ஆம் ஆண்டு (காலம் 1.4.2015 முதல் 31.3.2018 வரை) மற்றும் 2019-2020 ஆண்டுக்கான (காலம் -01.4.2016 முதல் 31.3.2019 வரை) தமிழக முதல்வா் மாநில விளையாட்டு விருது பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.