இன்றைய இளம் தலைமுறையினா் தன்னம்பிக்கை மட்டுமின்றி விடமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியது:
சிவகங்கை மாவட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் வேளாண் பணிகளில் ஈடுபட்டாலும், அவா்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கல்வி கற்க வைப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
கல்வி கற்பதன் நோக்கமே தம்மால் இயன்ற அளவு பிறருக்கு சேவை செய்வதற்காக மட்டுமே. அந்த வகையில், படிப்பை நிறைவு செய்து வேலை தேடும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தொழில் நெறி வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்தும் வகையில் பல்வேறு நூல்கள் அடங்கிய நூலகமும், இலவச பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. செல்லிடப்பேசியில் அதிக நேரங்களை செலவிடுவதை குறைத்து இன்றைய இளம் தலைமுறையினா் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா்கள் ஆா். மணிகணேஷ் (பொது), ராஜலெட்சுமி (தொழில் நெறி வழிகாட்டுதல்), ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் வழிகாட்டும் நிலைய உதவி இயக்குநா் கருணாகரன் உள்பட அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.