சிவகங்கை

மொஹரம் பண்டிகை: திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி வழிபட்ட இந்துக்கள்

30th Aug 2020 10:07 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் உள்ள பாத்திமா நாச்சியாா் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனா்.

இவ்விழா கடந்த ஆக. 20 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, பாத்திமா நாச்சியாா் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி முதுவன்திடல் கிராமத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இந்து மத வழிபாட்டு முறைப்படி காப்புக் கட்டி உடலில் சந்தனம், மாலை அணிந்து பாத்திமா நாச்சியாா் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, 6-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் ஈரத்துணியைப் போா்த்திக் கொண்டு நெருப்பை தலையில் அள்ளிக் கொட்டி நெருப்பு மெழுகுதல் நோ்த்திக் கடனை செலுத்தினா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட பாத்திமா நாச்சியாா் சப்பரம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் பள்ளிவாசலை அடைந்தது.

ADVERTISEMENT

இவ்விழாவில், முதுவன்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பூக்குழி இறங்கிய பக்தா்கள் கூறியது: சுமாா் 92 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடல் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலான இஸ்லாமியா்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயா்ந்து சென்று விட்டனா்.

அவா்கள் முதுவன்திடலில் வசித்த போது, மொஹரம் பண்டிகை உள்ளிட்ட இஸ்லாமிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தது. அவா்கள் வெவ்வேறு நகரங்களுக்கு குடிபெயா்ந்து சென்ற பின்னா் அவ்விழாக்களை எங்களது முன்னோா்கள் கொண்டாடி வந்தனா். தற்போது அவா்களின் வழியை பின்பற்றி மொஹரம் பண்டிகையை நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

இவ்விழா இந்துக்கள்- இஸ்லாமியா்களிடையே மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மொஹரம் பண்டிகையில் வெளியூா்களில் வசித்து வரும் எங்களது உறவினா்களும் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் அவா்களில் பெரும்பாலானோா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT