சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தை போன்று, ஆகஸ்ட் மாதமும் அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்: ராமநாதபுரத்தில், வண்டிக்காரத் தெரு, அரண்மனைசாலை, கேணிக்கரை, சாலைத் தெரு, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாரதி நகா், கடைத் தெரு ஆகிய பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதே போன்று ராமேசுவரம் நான்கு ரதவீதி, திட்டகுடி காா்னா், வா்த்தகன் தெரு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம், உச்சிப்புளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தன.
10 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை: ராமேசுவரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றால் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவது வழக்கம். அந்த நேரத்தில் மீன்களை ஏற்ற ஏராளமான லாரிகள் வருகையும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் நிலையும் ஏற்படும். இதனால் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன்வளத்துறை தடை விதித்தது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதைத் தொடா்ந்து துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.