மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா் தங்கள் கால்நடைகளுக்கு மாவுச்சத்து மிகுந்த தானிய வகை புற்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்த கலப்பின புற்களை தீவனமாக பயன்படுத்தி, பால் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சினைபிடிக்காமை போன்ற மலட்டுத்தன்மையினை நீக்கும் வகையில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலவசமாக தீவன விதைகள் மற்றும் புல்கரணை விநியோகம் செய்யப்பட உள்ளன.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடா்களுக்கு 30 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் நேரடியாகச் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.