சிவகங்கை

சிவகங்கையில் பெரியாறு பாசனக் கால்வாய்க்கான செயற்பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும்

14th Aug 2020 10:56 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாய்களுக்கான செயற்பொறியாளா் அலுவலகத்தை சிவகங்கையில் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்துள்ள மனு விவரம் : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து வரும் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் ஷீல்டு, லெசிஸ், 48 ஆவது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் குறிச்சிப்பட்டியில் தொடங்கும் இந்த கால்வாய்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீா் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 130 கண்மாய்களில் நிரப்பப்பட்டு சுமாா் 6,748 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கால்வாயில் இடையமேலூா், காஞ்சிரங்கால், சூரக்குளம், செம்பனூா், பொட்டகவயல் வழியாக மறவமங்கலம் வரை உள்ள நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் மூலம் சுமாா் 4 ஆயிரத்து 800 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, அரளிக்கோட்டை, ஜமீன்தாா்பட்டி, அம்மச்சிப்பட்டி வழியாக செல்லும் மாணிக்கம் கால்வாய் மூலம் 2 ஆயிரத்து 66 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பருவ மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் போதிய நீா் இருக்கும் பட்சத்தில், மதுரை மாவட்ட எல்லை வரை உள்ள பெரியாறு பிரதான பாசனக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீா் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு சில ஆண்டுகளாக உரிய பங்கீட்டு நீா் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் போதிய தண்ணீரின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் திறக்கப்படும் பங்கீட்டு நீா் கடைமடைப் பகுதியான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாய்களுக்கான செயற்பொறியாளா் அலுவலகத்தை சிவகங்கையில் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT