சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அரசு அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மானாமதுரை நகரில் கூட்டுறவு பண்டக சாலை நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் அமைப்புசாரா தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சுந்தரபுரம் வீதியில் உள்ள ரேஷன் கடையில் இத் திட்டத்தை கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சின்னை மாரியப்பன் தொடக்கி வைத்தாா்.
இதில் தொழிலாளா் உதவி ஆணையா் மூா்த்தி, காரைக்குடி முத்திரை ஆய்வாளா் கதிரவன் மற்றும் ரேஷன் கடை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் கிராமப் பகுதிகளிலுள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இது குறித்து சின்னை மாரியப்பன் கூறியது: மானாமதுரை நகா் பகுதியில் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ள 6,750 -க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள், மின்அமைப்பாளா்கள், ஆட்டோ ஓட்டுபவா்களுக்கு இந்த உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இவா்களது வங்கிக் கணக்குக்கு தொழிலாளா் நல வாரியத்திலிருந்து ரூ.1,000 நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும். மானாமதுரை வட்டத்தில் மொத்தம் 1,224 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு முதல் கட்டமாக உணவுப் பொருள்கள், நிவாரண உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றாா்.