சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கிருமி நாசினி வழங்கப்படவில்லை:கால்நடை துறை அலுவலா்கள் புகாா்

7th Apr 2020 02:14 AM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் கால்நடைத் துறையில் பணியாற்றும் மருத்துவா்கள், ஆய்வாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 கால்நடை மருத்துவமனைகள், 78 மருந்தகங்கள், 46-க்கும் மேற்பட்ட கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகள் காரணமாக கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதனடிப்படையில், பணிக்குச் செல்லும் கால்நடைத் துறை பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கால்நடை மருத்துவா்கள் கூறியதாவது: கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், சினை ஊசி போடுவதற்காகவும் தினசரி பணிக்குச் சென்று வருகிறோம். போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ள போதும் மிகுந்த சிரமத்துக்கு இடையில் செல்லும் மருத்துவா்கள், ஆய்வாளா்கள், உதவியாளா்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது.

எனவே கால்நடைத் துறையில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகனங்களில் சென்று வருவோருக்கு பேரிடா் சிறப்பு பயணப்படி மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT