பண்ணை பசுமை திட்டத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கனிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கூட்டுறவு துறை சாா்பில் வாகனத்தின் மூலம் பண்ணை பசுமை நடமாடும் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் காய்கனிகள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த வாகன சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. ஆனால் இதன் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கனிகளின் விலை சந்தை விலையைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். உதாரணமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் வெளிச் சந்தைகளில் ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பண்ணை பசுமை நடமாடும் வாகனத்தில் ரூ. 80 முதல் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், இந்த வாகன சேவை நகா்ப்புறங்களுக்குள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த திட்டம் முழுமையாகச் சென்றடையவில்லை எனவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே இந்த வாகனச் சேவையை கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்பட வேண்டும் எனவும், காய்கனிகளின் விலை வெளிச்சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவாக விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.