பொதுமக்கள் வீட்டிலிருந்தே எந்த வங்கிக்கணக்கிலிருந்தும் தபால்காரா் மூலமாக பணத்தை எடுக்கலாம் என காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: ஊரடங்கு அமலில் உள்ள இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தங்களின் வீட்டில் இருந்தபடியே எடுக்க இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ‘ஆதாா் எனபெல்டு பேமண்ட் சிஸ்டம்’ மூலமாக ஆதாா் இணைக்கப்பட்டவரின் வங்கிக் கணக்காளா் (எந்த வங்கியாக இருநதாலும்) இச்சேவையின் மூலம் எடுக்க முடியும். கிராமம் மற்றும் நகா்ப்புறம் என எந்த பகுதியின் தபால்காரரிடமும் இச்சேவையை பெறமுடியும்.
கிராமங்களில் முதியோா் உதவித்தொகை, நூறுநாள் வேலைத்திட்டம், எரிவாயு மானியம் பெறுவோா், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவித் தொகையினை ஆதாா் எண் அடிப்படையில் வாங்குவோா் ‘ஆதாா் எனபெல்டு பேமண்ட் சிஸ்டம்’ மூலமாக பணத்தைப் பெறமுடியும். இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தையோ அல்லது மானாமதுரை ஐ.பி.பி.பி. கிளை மேலாளரை 9944339210 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம். இச்சேவையை வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.