சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் புகுந்த 3 மலைப் பாம்புகளை கிராமத்தினா் சனிக்கிழமை பிடித்து தீயணைப்பு வீரா்களிடம் ஒப்படைத்தனா்.
சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது பிரான்மலை. இதனையொட்டியுள்ள மட்டிகரைபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சனிக்கிழமை 10 அடி நீள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதை பாா்த்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனா். அப்போது மேலும், இரண்டு 10 அடி நீள மலைபாம்புகள் இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா் கிராம இளைஞா்கள் மலைப்பாம்புகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பிடித்தனா். ஊரடங்கு உத்தரவினால் வாகனச் சத்தமின்றி இருந்ததால் வனப்பகுதியில் உள்ள பாம்புகள் கிராமத்துக்குள் வந்திருக்கலாம் எனவும் வறட்சி காரணமாக இரை தேடி வந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் 3 மலைப்பாம்புகளையும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் பாம்புகளை பிரான்மலை வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனா்.
ஒரே நேரத்தில் மூன்று மலைப் பாம்புகள் பிடிபட்டது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.