காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது : சிவகங்கையில் தொழில் வளம் மேம்படும் வகையில் கிராபைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலை நீடித்து வருகிறது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கடந்த ஆண்டு பருவ மழையின் போது காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக முறையான கட்டமைப்பு பணிகள் இல்லாததால் ஏராளமான தண்ணீர் கடலில் வீணாக கலந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு வீணாக கடலில் கலக்கும் நீரை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த முன் வர வேண்டும். இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி பொது மாநாடு நடைபெற உள்ளது என்றார்.