சிவகங்கை

மானாமதுரையில் கொட்டித் தீர்த்த மழை

17th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் பல மாதங்களுக்குப்பின் திங்கள்கிழமை இரவு கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
மானாமதுரையில் கோடை காலம் தொடங்கியது முதலே கடும் வெயில் கொளுத்தி வந்தது. கோடைகாலம் முடிந்தும் வெயில் மட்டும் குறையவில்லை. தற்போது காற்று வீசும் காலமும் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. 
இந் நிலையில் அவ்வப்போது மானாமதுரை பகுதியில் சாரல் தூறி மக்களை குளிர்வித்து வந்தது. இதற்கிடையில் திங்கள்கிழமை மாலை வானத்தை கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆரம்பத்திலேயே பலமாக பெய்யத் தொடங்கிய மழை அதன்பின் தீவிரமடைந்தது. 
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்துகொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டதால் மானாமதுரை பகுதி இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் வெளியேற முடியாத இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. பல மாதங்களுக்குப்பின் இப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது பெய்துள்ள இந்த மழை மானாமதுரை பகுதியில் குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT